தேனி மாவட்டம் அய்யம்பட்டியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு திருவிழா! மதுரை சத்யம் தொழில்குழுமம் நிர்வாக இயக்குனர் வி.செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு!!






தேனி, பிப்.17-
தேனி மாவட்டம், சின்னமனூர் ஒன்றியம், அய்யம்பட்டியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஏழை காத்தம்மன், ஸ்ரீவல்லடிகார சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு பிரமாண்ட ஜல்லிக்கட்டு திருவிழா கோலாகலமாக நடந்தது. விழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 150க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.



ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், காளையர்களுக்கும் முறையான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தேனிமாவட்ட கலெக்டர் திருமதி பல்லவி பல்தேவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி ஆகியோர் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். விழாவில் மதுரை சத்யம் தொழில்குழுமத்தின் நிர்வாக இயக்குனர் வி.செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு வாடிவாசல் பகுதியில் அய்யம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி தனலட்சும் அண்ணாதுரை, அய்யம்பட்டி கிராம கமிட்டி தலைவர் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் சிறப்பு மரியாதை அளித்தனர்.


வாடிவாசலில் இருந்து துள்ளிக்குதித்து வெளியே வந்த காளைகளை, தயாராக இருந்த காளையர்கள் பாய்ந்து அடக்கினர். பல காளைகள் மாடுபிடி வீரர்களின் கைகளில் சிக்காமல் ஆட்டம் காட்டிவிட்டு துள்ளிக்குதித்து ஓடின. சில காளைகள் நின்று விளையாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தின. விழாவில் பாரபட்சமின்றி கலந்து கொண்ட அனைத்து காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் விழாக்கமிட்டியார்கள் பரிசு வழங்கி சிறப்பித்தது சிறப்பம்சமாக இருந்தது. பரிசு பொருட்களை கலெக்டர் பல்லவி பல்தேவ், போலீஸ் எஸ்.பி, சாய்சரண் தேஜஸ்வி, மதுரை சத்யம் தொழில்குழுமம் நிர்வாக இயக்குனர் வி.செந்தில்குமார், சத்யம் நிறுவனத்தின் பொதுமேலாளர் ஞானசேகரன் ஆகியோர் வழங்கினர்.



ஜல்லிக்கட்டு விழாவை ஏராளமான வெளிநாட்டினரும் பார்த்து ரசித்தனர். தமிழர்களின்  வீரத்தை பறைசாற்றும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் பங்கேற்க தாங்களும் ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், விலங்குகள் நல வாரிய உறுப்பினர் டாக்டர் வெங்கிடசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பி ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் சிறப்பாக செய்திருந்தனர்.




Comments

Popular posts from this blog

விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!

இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர்

வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்!