விவசாயத்தை வளமாக்கும் நுண்ணீர்ப் பாசனம்!
விவசாயத்தை வளமாக்கும் நுண்ணீர்ப் பாசனம்!
நாமக்கல்
மாவட்டத்தின் மொத்தப் பரப்பு 3,36,719 எக்டர். மாவட்டத்தின் சராசரி மழையளவு 716.54
மி.மீ. கடல் மட்டத்தில் இருந்து 300-500 மீட்டர் உயரத்தில் நிலப்பரப்பு
அமைந்துள்ளது. மொத்தம் 8 வட்டங்கள், 15 ஒன்றியங்கள் உள்ளன. புகழ் பெற்ற கொல்லிமலை
கடல் மட்டத்திலிருந்து 1,300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சமவெளிப் பகுதிகளில்
பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. நெல், சோளம், மக்காசோளம், பாசிப்பயறு,
உளுந்து, தட்டைப்பயறு, நிலக்கடலை, ஆமணக்கு, எள், பருத்தி, கரும்பு, தக்காளி,
கத்தரி, வெண்டை, வெங்காயம், மஞ்சள், மரவள்ளி, வாழை, வெற்றிலை ஆகியன முக்கியப்
பயிர்களாகும். கொல்லிமலையில் நெல், இராகி, மிளகு, காபி, அன்னாசி, பலா ஆகியன
விளைகின்றன. இங்கு விளையும் மிளகு உலகத்தரம் வாய்ந்தது.
இந்த
மாவட்டத்தின் முக்கிய வாய்க்கால் பாசன ஆதாரமாக காவிரியாறு உள்ளது. மேட்டூர்
அணையிலிருந்து பெறப்படும் காவிரி நீர், நீரேற்றுப் பாசனம் மற்றும் இராஜா
வாய்க்கால், குமாரபாளையம் வாய்க்கால், பொய்யேரி வாய்க்கால், மோகனூர் வாய்க்கால்
மூலம், 6,538 எக்டர் நிலத்துக்குப் பாசன நீராக அமைகிறது. மொத்தச் சாகுபடிப் பரப்பு
2,07,717 எக்டர். இதில் வாய்க்கால் மற்றும் ஏரிப் பாசனப் பரப்பு 10,625 எக்டர்.
கிணற்றுப் பாசனப் பரப்பு 74,425 எக்டர். மானாவாரி சாகுபடிப் பரப்பு 1,22,667
எக்டர்.
கடந்த
பல ஆண்டுகளாகப் போதிய மழையில்லாததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து
போனது. அதனால், கிணற்றுப் பாசனப் பரப்பும் குறைந்து வருகிறது. இந்நிலையை மாற்றி,
குறைந்த நீரில் அதிகப் பரப்பில் சாகுபடி செய்ய ஏதுவாக, தமிழ்நாடு அரசு நுண்ணீர்ப்
பாசனத் திட்டத்தைக் கொண்டு வந்தது. இதனால் சாகுபடிப் பரப்பு மிகுவதுடன், சிறந்த
உரப் பயன்பாடு மற்றும் களை நிர்வாகம், குறைந்த மனித ஆற்றல் பயன்பாடு, தரமான மகசூல்
ஆகிய பயன்கள் கிடைக்கின்றன.
இந்த
அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில், 2010-11 ஆம் ஆண்டு முதல் 2016-17 ஆம் ஆண்டு
முடிய 11,995 எக்டர் பரப்பில் 15,403 விவசாயிகளுக்கு ரூ.77.68 கோடி மானியமாக
வழங்கப்பட்டு சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும்,
2017-18 மற்றும் 2018-19 நிதியாண்டில் 10,200 எக்டர் பரப்பில் நுண்ணீர்ப் பாசனத்தை
அமைப்பதற்கான மானியமாக ரூ.6,698 இலட்சத்தை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை
ரூ.896.92 இலட்சம் மானியத்தில் 1,952 எக்டர் பரப்பில் நுண்ணீர்ப் பாசனம்
அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத்
திட்டத்தின் மூலம் மழைத்தூவானை அமைத்துப் பயனடைந்து வரும், மல்லசமுத்திரம்
வட்டாரம், கீழ்முகம் விவசாயி கு.பழனிவேல் கூறியதாவது:
“எனக்கு
2.80 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் நிலக்கடலை, சோளம், பாசிப்பயறு போன்ற பயிர்களைப்
பயிரிட்டு வருகிறேன். எங்கள் கிணற்றில் குறைந்த அளவே நீர் இருப்பதால்,
பெரும்பாலும் மானாவாரியாகவே சாகுபடி செய்து வந்தேன். இதனால் குறைந்த வருமானமே
கிடைத்து வந்தது. இந்த வகையில் மானாவாரியாக நிலக்கடலையை விதைத்தேன். விதைத்து 45
நாட்கள் வரை மழையே இல்லாததால் பயிர் வாடத் தொடங்கியது. சாகுபடி செய்த செலவுக்குக்
கூட மகசூல் வராது போல் இருந்தது.
அதனால்,
விவசாயத்தை விட்டுவிட்டு, வேறு ஏதேனும் செய்யலாம் என்று நினைத்துக்
கொண்டிருந்தேன். இந்த நேரத்தில் வேளாண்மை அலுவலர்கள், நுண்ணீர்ப் பாசனத்
திட்டத்தின் மூலம் மழைத்தூவானை அமைத்தால், குறைந்த நீரிலேயே நிலக்கடலைப் பயிரைக்
காப்பாற்றி விடலாம் என்று என்னிடம் சொன்னார்கள். உடனே நான் இதையும் தான் செய்து
பார்ப்போமே என்று விண்ணப்பம் செய்து, வேளாண்மைத் துறை மூலம் அரசு மானியத்தில்
மழைத்தூவானை அமைத்தேன். இதைக் கொண்டு பத்து நாள் இடைவெளியில் மூன்று முறை நீரைத்
தெளித்து நிலக்கடலைச் செடிகளை வறட்சியில் இருந்து காப்பாற்றினேன். இதனால் சராசரி
மகசூலும் கிடைத்தது.
அடுத்து,
மழைத்தூவான் மூலம் சோளத்தைப் பயிரிட்டு அதிலும் நல்ல மகசூலை எடுத்தேன். அதனால்,
வேறு வேலைக்குச் செல்லலாம் என்னும் எண்ணம் என்னிடம் இருந்து மறைந்து விட்டது.
நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் மூலம் மழைத்தூவானை எனக்கு வழங்கிய, தமிழ்நாடு
அரசுக்கும், முதலமைச்சர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறேன்'' என்றார்.
இவரைப் போலச்
சொட்டு நீர்ப் பாசனத்தை அமைத்துப் பயனடைந்து வரும் பேளுக்குறிச்சி விவசாயி
மு.சுரேஷ் கூறியதாவது:
“எனக்கு
4 ஏக்கர் புன்செய் நிலம் உள்ளது. இதில், நிலக்கடலை, சோளம், மஞ்சளைச் சாகுபடி
செய்து வருகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக எங்கள் பகுதியில் சரியான மழை இல்லாததால்
கிணற்றில் நீர் வற்றி விட்டது. அதிலிருந்து சரியாகப் பயிர் செய்ய முடியவில்லை.
அந்தச் சமயத்தில் எங்கள் பகுதி வேளாண்மை அலுவலர்கள் கொடுத்த ஊக்கத்தினால் நான்
சொட்டுநீர்ப் பாசனத்தை அமைத்தேன். நான் சிறு விவசாயி என்பதால் 100% மானியத்தில் 4
ஏக்கர் நிலத்துக்கும் சொட்டுநீர்ப் பாசனத்தை அமைத்துக் கொடுத்தார்கள். இரண்டு
ஏக்கரில் நிலக்கடலை, இரண்டு ஏக்கரில் மஞ்சளைப் பயிரிட்டுள்ளேன்.
மேலும்,
முன்பு உரம் மற்றும் களையெடுக்க நிறையச் செலவாகும். இப்போது சொட்டுநீர்ப்
பாசனத்தால் நீர் முழுவதும் பயிரின் வேருக்கு அருகில் கிடைப்பதால் களை குறைந்து
விட்டது. இப்போது உரங்களைப் பாசனத்துடன் கொடுப்பதால் உரம் வீணாகாமல் பயிருக்குக்
கிடைப்பதுடன், உரத்தைப் போடும் செலவும் குறைந்து விட்டது. இப்போது ஒரு மணி
நேரத்தில் ஒரு ஏக்கருக்குப் பாசனம் செய்ய முடிகிறது. மேலும், கூடுதல் மகசூலும்
கிடைப்பதால் வருமானம் அதிகமாகிறது. எனக்கு 100% மான்யத்தில் சொட்டுநீர்ப் பாசனம்
அமைக்க உதவிய, தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
இவரைப்
போல, தெளிப்பு நீர்ப் பாசன வசதியைப் பெற்று பயனடைந்து வரும், தொ.பச்சடையாம்பாளைய
விவசாயி இரா.நடராஜன் கூறியதாவது:
“எனக்கு
4 ஏக்கர் நிலம் உள்ளது. எங்கள் பகுதியில் போதிய மழை இல்லாததால் என்னால் சரியாக
விவசாயம் செய்ய முடியவில்லை. எங்களுக்கு விவசாயம் மட்டுமே வாழ்வாதாரம் என்பதால்,
எங்கள் குடும்பப் பொருளாதாரம் மிகவும் நலிந்தது. அப்பொழுது வேளாண்மைத் துறை
அலுவலர்கள் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தைப் பற்றிக் கூறினார்கள். இதையடுத்து அவர்களின்
பரிந்துரையில் முழு மானியத்தில் தெளிப்பு நீர்ப் பாசனத்தை அமைத்தேன்.
முதலில்
வம்பன் 6 இரக உளுந்தைப் பயிரிட்டேன். 12 குவிண்டால் கிடைத்தது. சாதாரணமாக
எக்டருக்கு 10 குவிண்டால் கிடைக்கும். இப்போது தெளிப்பு நீர்ப் பாசனத்தால்
கூடுதலாக 2 குவிண்டால் கிடைத்தது. அத்துடன் பாசன நீரின் தேவையும் 50% குறைந்தது.
மண் இறுகாமல் காற்றோட்ட வசதியுடன் இருந்தது. தெளிப்புநீர்க் குழாய்கள் மற்ற
இடங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் உள்ளதால், அருகிலுள்ள பயிர்களுக்கும்
பாசனம் செய்ய முடிகிறது. இப்போது சோளத்தைப் பயிரிட்டுள்ளேன். வாய்க்கால் பாசன
முறையில் ஏற்படும் பாசன ஆட்கள் கூலி இம்முறையில் முழுமையாக மிச்சமாகிறது. குறைந்த
நீரைக் கொண்டு சாகுபடிக் காலம் முழுவதும் பாசனம் செய்ய முடிகிறது. முழு
மானியத்தில் எனக்கு உதவிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
இயற்கை விவசாய ஆலோசனைக்கு அழைக்கவும் 75508 75508
நன்றி பச்சை பூமி
Comments
Post a Comment