இயற்கை விவசாயத்தில் அசத்தும் இளைஞர்!
மாதம் ரூ. 4 லட்சம் சம்பளத்தில் வெளிநாட்டு வேலையைஉதறி விட்டு இயற்கை விவசாயத்தில் அசத்தும் இளைஞர்!
தென்காசி, டிச.05-
வெளிநாட்டில் மாதம் ரூ.4 லட்சம் சம்பாதித்தவர் தாயகம் திரும்பியதும் இயற்கை விவசாயத்தில்
ஈடுபட்டு வருகிறார். உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது என்பது பழமொழி.
இடுபொருட்கள் செலவு, ஆள் பற்றாக்குறை, இயற்கை பேரிடர்களால் பாதிப்பு போன்றவற்றால் பெரும்பாலான
விவசாயிகள் நஷ்டத்தையே சந்திக்கின்றனர். இதனால் விவசாய தொழிலை கைவிட்டு மாற்றுத் தொழிலுக்கு
பலர் சென்றுவிட்டனர். இளம் தலைமுறையினரும் விவசாயம் செய்ய ஆர்வம் காட்டுவதில்லை.
ஆனால், வெளிநாட்டில் மாதம் ரூ.4 லட்சம் சம்பாதித்தவர், தாயகம் திரும்பியதும் இயற்கை
விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். தென்காசி மாவட்டம் வடகரையைச் சேர்ந்தவர் முகமது யாசின்
(45). இவர், வடகரையில் உள்ள தனது விவசாய நிலத்தில் 5 ஏக்கரில் இயற்கை விவசாயம் மூலம்
நெல் சாகுபடி செய்துள்ளார். இதுகுறித்து முகமது யாசின் கூறியதாவது:
நான் டிஎம்இ படித்துள்ளேன். சவுதி அரேபியாவில் உள்ள இரும்பு கம்பிகள் தயாரிக்கும்
தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்தேன். 23 ஆண்டுகளாக அங்கு வேலை பார்த்தேன்.
எனக்கு கிடைத்த வருமானத்தைக் கொண்டு, எங்கள் ஊரில் 18 ஏக்கர் விவசாய நிலம் வாங்கினேன்.
மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் கிடைத்தாலும், இனி குடும்பத்துடன் இருந்துவிடலாம் என கடந்த
7 மாதங்களுக்கு முன் முடிவு செய்து, தாயகத்துக்கு திரும்பி வந்துவிட்டேன்.
ரசாயன உரம், பூச்சி மருந்து பயன்படுத்தாமல் விளைவிக்கப்படும் வேளாண் பொருட்களுக்கு
நல்ல எதிர்காலம் உள்ளது. எனவே, இயற்கை விவசாயத்தில் ஈடுபட முடிவு செய்தேன். தஞ்சாவூரில்
நம்மாழ்வார் இயற்கை விவசாயிகள் தொடர்பு கிடைத்தது. வாட்ஸ் அப் மூலம் அவர்களிடம் தொழில்நுட்பங்களை
கேட்டறிந்து, முதல்கட்டமாக 5 ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளேன். இயற்கை விவசாயத்துக்கு
தேவையான இடுபொருட்களையும் அவர்கள் அனுப்பிவைத்தனர். விதைப்பு காலத்தில் பாரம்பரிய நெல்
ரகம் கிடைக்காததால், ஏடிடி 45 ரக நெல் சாகுபடி செய்துள்ளேன்.
நெல்தோகைகளில் புழு வெட்டு இருந்தது. இதற்கு மிளகாய் கரைசல் தெளித்தேன். ஓர் ஏக்கருக்கு
ஒரு கிலோ என்ற அளவில் காய்ந்த மிளகாயை நன்றாக அரைத்து, 5 லிட்டர் தண்ணீர் சேர்த்து
கரைசலாக்கி, 10 லிட்டர் தண்ணீருக்கு 400 மில்லி லிட்டர் மிளகாய் கரைசல் சேர்த்து தெளித்தேன்.
அதன் பின்னர் புழு வெட்டு பிரச்சினை இல்லை. தற்போது நெல் 28 நாள் பயிராக உள்ளது. பயிர்
நன்கு வளர, அதை நடவு செய்த 15, 30, 40, 50-ம் நாட்களில் கடற்பாசி திரவத்தை தெளிக்க
வேண்டும். ஒரு முறை கடற்பாசி திரவம் தெளித்துள்ளேன்.
நோய் தாக்குதலை தடுக்க ஓர் ஏக்கருக்கு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் தலா 300 கிராம்
வீதம் எடுத்து, நன்கு அரைத்து வடிகட்டி தெளிக்க வேண்டும். பூச்சிக்கொல்லி, ரசாயன உரம்
பயன்படுத்தி செய்யும் விவசாயத்தை விட இதில் செலவு அதிகமாக உள்ளது. இயற்கை விவசாயத்துக்கான
இடுபொருட்களை வேளாண்துறை குறைந்த விலையில் வழங்கினால் பெரும்பாலான விவசாயிகள் ஆர்வத்துடன்
இயற்கை விவசாயம் செய்வார்கள். தொடர்ந்து ஒருங்கிணைந்த பண்ணை முறையில் இயற்கை விவசாயம்
செய்ய முடிவு செய்துள்ளேன். அதனால், 70 ஆடுகள், 5 மாடுகள் வளர்த்து வருகிறேன். நெல்
நடவு செய்யப்பட்டுள்ள நிலம் தவிர மற்ற நிலங்களில் தென்னை, வாழை உள்ளன என்றார்.
Comments
Post a Comment