சாலையோரங்களில் மரக்கன்றுகளை


வளர்த்து வரும் சிவகங்கை  எஸ்.. !




சிவகங்கை, டிச.25-

சிவகங்கை சிறப்பு எஸ்ஐ ஒருவர், தனது ஓய்வு நேரத்தில் சாலையோரத்தில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார். மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை 2013-ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்காக சாலையோரங்களில் இருந்த பல ஆயிரம் பழமையான மரங்கள் அழிக்கப்பட்டன. ஆனால் அதன்பிறகு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஒரு மரக்கன்று கூட நடவு செய்யவில்லை.

இதனால் கோடைக்காலங்களில் வாகனங்களில் செல்வோருக்கு வெப்பத் தாக்கம் அதிகமாக உள்ளது. இதையடுத்து சிவகங்கை தாலுகா காவல்நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணிபுரியும் எம்.ஜி.ராமச்சந்திரன் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் நாட்டரசன்கோட்டை அருகே குளிர்ந்த சூழ்நிலையை உருவாக்குவதற்காக மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார்.மேலும் இவர் ஓய்வு நேரங்களில் மட்டுமே இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறார்.

பணிப்பளு நிறைந்த காவல் பணியில் மரக்கன்றுகளை நட்டு, அதை பாதுகாத்து வரும் சிறப்பு எஸ்.ஐயின் செயலை வாகன ஓட்டிகள் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து எம்.ஜி.ராமச்சந்திரன் கூறியதாவது: சாலையோரங்களில் மரங்கள் இல்லாததால் கோடைக் காலங்களில் வாகன ஓட்டிகளுக்கு ஒருவிதமாக எரிச்சலும், சோர்வும் ஏற்படும். இதனால் சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படும்.

இதனால் சிவகங்கை தாலுகா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நாட்டரசன்கோட்டை பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறேன். சில கன்றுகள் மரங்களாக வளர்ந்துவிட்டன. அந்த மரக்கன்றுகள் பட்டுபோகாமல் இருக்க ஓய்வு நேரங்களில் சிவகங்கையில் இருந்து நாட்டரசன்கோட்டை சென்று தண்ணீர் ஊற்றுவேன். தற்போது மழை பெய்து வருவதால், அந்த நீரை மரங்களுக்கு பாய்ச்சி வருகிறேன். பிற்கால சந்ததியினர், எந்த புண்ணியவான் மரம் வளர்த்தாரோ? காற்று குளு, குளு என்று வருகிறது என்று கூறி என்னை நினைப்பர். அதுவே எனக்கு கிடைத்த பாக்கியம் தான், என்று கூறினார்.




Comments

Popular posts from this blog

விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!

இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர்

வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்!