இளம்பெண்! அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கும் காளைகளை வளர்க்கிறார்!!


படித்தது ஆங்கில இலக்கியம்... பார்ப்பது வயக்காட்டு வேலைவிவசாயத்தில் அசத்துகிறார் மதுரை பட்டதாரி இளம்பெண்!அலங்காநல்லூர்  ஜல்லிக்கட்டுக்கும் காளைகளை வளர்க்கிறார்!!





மதுரை, டிச.02-
மதுரையில் ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு பெற்றோருடன் விவசாயம் பார்க்கும் இளம் பெண், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்காக நான்கு காளைகளை தயார்படுத்தி வருகிறார்.
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் ஜனவரியில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள மதுரையைச் சுற்றி உள்ள கிராமங் களில் காளைகளை அதன் உரிமை யாளர்கள் தயார்படுத்தி வருகி றார்கள்.

பொதுவாக ஜல்லிக்கட்டு ஆண்களுக்கான விளையாட்டாகப் பார்க்கப்படுகிறது. காளைகளை அடக்கும் காளையர்களின் வீரத்தையும், அவர்களைப் புறமுதுகு காட்டி ஓட வைக்கும் காளைகளின் பெருமைகளையும் பறைசாற்றும் விளையாட்டாக ஜல்லிக்கட்டு உள்ளது. அதேபோல் ஜல்லிக்கட்டைப் பார்க்க வரும் பார்வையாளர்களும், பெரும் பாலும் ஆண்களாகவே உள்ளனர்.
அதை மாற்றிக்காட்டும் விதமாக இந்த ஆண்டு மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே கல்லம்பட்டி சிற்றூரில், இளம் பெண் கனிமொழி வரும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க நான்கு காளைகளைத் தயார் செய்து வருகிறார். அதில் காங்கேயம் மாடுகள் இரண்டு, தேனி மலை மாடு ஒன்று, புளிக்குளம் மாடு ஒன்று.

தான் வளர்க்கும் ஒவ்வொரு காளைக்கும் செல்லப் பெயர் வைத்து, நண்பர்களைப்போல் வளர்ப்பதில் கனிமொழிக்கு நிகர் யாரும் இல்லை. கனிமொழி இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்திருந்தாலும், வீட்டில் உள்ள காளைகளைப் பராமரிப்பது, பெற்றோருடன் சேர்ந்து விவசாயப் பணிகள் செய்வது எனத் தினமும் பரபரப்பாக செயல்படுகிறார். ஊருக்கு வெளியே புல் வெளியில் தனது ஜல்லிக்கட்டுக் காளை 'கருப்பன்'னை மேயவிட்டுக் கொண்டிருந்தார் கனிமொழி.

அவரிடம் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையைத் தேடிச் செல்லாமல் விவசாயம், ஜல்லிக்கட்டு என்று சென்றுவிட்டீர்களே எனக் கேட் டோம். அதற்கு அவர், சிறு வயதில் இருந்தே என்னோட வீட்டைச் சுற்றி காளைகள்தான் இருக்கும். படித்த நேரம் போக, மற்ற நேரங்களில் காளைகளோடுதான் நான் அதிகம் விளையாடுவேன். நாங்க வளர்க்கும் காளைகள் அனைத்தும் நான் சொல்லும் வார்த்தைக்குக் கட்டுப்படும். அந்த அளவுக்கு பழக்கப்படுத்தி வைத்திருக்கிறேன். அப்படியிருக்கும்போது நாமும் ஏன், ஜல்லிக்கட்டுக்கு காளையைத் தயார் செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்க நான் வளர்க்கும் நான்கு காளைகளில் கருப்பனை கடந்த ஒரு ஆண்டாகத் தயார்படுத்தி வருகிறேன்.

காலையில் எழுந்ததும் வயலுக்கு வேலைக்கு போகும்போது காளைகளை நடை பயிற்சி, மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வேன். வீட்டுக்கு வந்ததும் நெல்லிக்காய், கடலை மிட்டாய், பருத்திக் கொட்டை உள்ளிட்ட ஊட்ட உணவுகள் வழங்குவது, குளிக்க வைப்பது எல்லாம் என்னுடைய வேலைதான். ஜல்லிக்கட்டில் பரிசு பெறுவதற்காக வளர்க்கவில்லை. அதில் நான் வளர்த்த காளை பங்கேற்பதே ஒரு பெருமைதான்.

ஜல்லிக்கட்டு ஆண்களுக்கான விளையாட்டு என்று மட்டும் சொல்லிட முடியாது. பெரும் பாலும் கிராமங்களில் காளை களை பராமரிப்பதே பெண்கள் தான். பெண்கள் வளர்க்கும் காளைகள்தான், ஜல்லிக்கட்டில் பங்கேற்கின்றன. ஆனால், இந்த விஷயம் வெளியே தெரி யாது. அந்தக் காளைகளை ஜல்லிக் கட்டுக்கு அழைத்துச் செல்லும் ஆண்களுக்கு அந்தப் பெருமை சென்று விடுகிறது. இந்த முறை நானே ஜல்லிக்கட்டுக்கு கருப்பனை அழைத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளேன் என்றார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் ‘ஜோதிகா’ எனும் செவலைக் காளையை கனி மொழி ஆசையாக வளர்த்து வந்த தாகவும், அது இறந்து போனதால் குடியிருக்கும் வீட்டுக்குப் பக்கத்திலேயே அக்காளையை அடக்கம் செய்து, தினமும் மாலை விளக்கேற்றி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

கனிமொழியின் தந்தை ராஜா கூறுகையில், ‘காளைகளை வாங்கி வீட்டில் கொண்டு வந்து விடுவதுதான் எங்கள் வேலை. அவற்றை பராமரித்து, பாதுகாப்பது கனிமொழிதான். ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்ப்பதால் எங்களுக்கு எந்த வருமானமும் கிடையாது. நமது பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என் பதற்காக வளர்க்கிறோம்’ என்றார்.



Comments

Popular posts from this blog

விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!

இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர்

வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்!